18-ஆம் வயதில் ஆன்மிகத் தேடலில் வீட்டிலிருந்து புறப்பட்ட நான், அந்த இளம் வயதிலேயே அமெரிக்காவிலிருந்து பாரதத்தை வந்தடைந்தேன். இப்போது எனக்கு 64 வயதாகிறது. 1978-இல் நான் திருவண்ணாமலை ஆசிரமத்தில் வசித்த வேளையில் கெய்ல் அங்கே வந்தபோது தான் எனக்கு அவர் அறிமுகமானார். அவ்வேளையில், மிகவும் மதிப்பிற்குரிய ஒரு ஆன்மிக குருவுடன் நான் வசித்துவந்தேன். குருவுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தது. இதனால், கெய்ல் என்னை மிகவும் பணிவுடனும், மரியாதையுடனுமே காண்பது வழக்கம். அவர் என்னிடம் ஆன்மிக சம்பந்தமான பல கேள்விகளைக் கேட்பார்; நான் பொதுவான ஆன்மிக வழிமுறைகளை அவருக்குக் கூறுவேன். 1980-ஆம் ஆண்டு துவக்கத்தில் அம்மாவின் ஆசிரமத்தை அடைந்தபோது, ஆரம்பத்தில் கெய்ல் களங்கமற்ற, கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். ஆனால், திடீரென்று அவரது சுபாவத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அவரது பக்குவமின்மை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது; அவரது அணுகுமுறை அடியோடு மாறியது; பொருந்தாத இயல்புகள் அவரை ஆட்கொண்டது. பொறாமை குணமுள்ள ஒரு குழந்தையைப் போல் அவர் அம்மாவுடன் நடந்துகொண்டார். அம்மாவிடம் ஏதாவது விஷயத்தின் பேரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், நாங்கள் வசிக்கும் குடிசையின் சுவரை அவர் ஓங்கி மிதிப்பார். அவர் ஆசிரம வாழ்வின் சூழ்நிலைகளோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தபோது அவருடைய ஆளுமையின் மற்றொரு பக்கம் வெளிப்பட ஆரம்பித்தது. அது அவருடைய பக்குவமற்ற தன்மை என்றே நான் முதலில் கருதினேன் என்றாலும், நாட்கள் செல்லச் செல்ல, அது அவ்வளவு சாதாரணமான குறை அல்ல என்பது எனக்குப் புரிந்துவிட்டது. பிறரை, அவருடைய முகத்திற்கு நேராகவே ஒரு விவேகமும் இன்றி, கேலி செய்யவும், குறை கூறவும் ஆரம்பித்தார். நான் முதல், யாருமே அவரது பக்குவமற்ற செயல்பாட்டிற்கு இரையாவதிலிருந்து தப்பவில்லை. நியாயமான செயலாக இருந்தால் கூட, அவரை யாராவது நேரடியாக விமரிசனம் செய்தால், அவர் உடனே பயங்கரமாக எதிர்ச்செயல் புரிவார்; உணர்ச்சிகளை அடக்க முடியாமல் வெளியிடுவார். ஒருவரை விமர்சிக்கும்போது எதிர்ச்செயல் புரிவது இயல்பே என்றாலும், கெய்லின் எதிர்ச்செயல்கள் தீவிரமாகி வந்தன. என்னுடன் ஓரளவு இருந்த மரியாதையும் மங்கி மறைந்தது. அவர் அகந்தை உள்ளவராகவும், சண்டை போடுபவராகவும் மாறிக்கொண்டிருந்தார். அம்மாவுடன் நெருங்கிப் பழகும் காரணத்தால், ஒருநாள் அவர் ஆத்ம பரிசோதனை செய்ய ஆரம்பிப்பார் என்றும், தனது தவறான செயல்முறைகளைத் திருத்திக்கொள்வார் என்றும் நான் எதிர்பார்த்தேன். துரதிர்ஷ்ட வசமாக அது நிகழவே இல்லை. அவர் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய காலம்வரை இதே நடைமுறையையே அவர் பின்பற்றினார். அது மேலும் மோசமாகிக் கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் அம்மாவின் பெற்றோரும், சகோதர சகோதரிகளும் வசித்திருந்த வீட்டிற்கு வெளியில் ஒரு சிறிய குடிசை மட்டுமே இருந்தது. அதில்தான் நாங்கள் அனைவரும் வசித்தோம். ஒருநாள் மிக மோசமான ஒற்றைத்தலைவலியால் துடித்த நான் குடிசையில் படுத்திருந்தேன். எனக்கு மிகவும் தாகமாக இருந்தது. அப்போது கெய்ல் ஒரு பழைய துணியை நனைத்து, தரையைத் துடைத்துக்கொண்டிருந்தார். என்னால் எழுந்திருக்கக் கஷ்டமாக இருந்த காரணத்தால், நான் கெய்லிடம் சிறிது தண்ணீர் தருமாறு கேட்டேன். சட்டென அவரது முகபாவம் மாறியது. அலறும் குரலில், நீயே சென்று தண்ணீர் எடுத்துக் குடி என்றார். தொடர்ந்து, அந்த நனைந்த அழுக்குத்துணியை என் முகத்தில் எறிந்தார். இதனால் என் மனம் தடுமாறியது. எழுந்து, அக்குடிசையின் வெளியில் சற்று தொலைவில் இருந்த குளியலறையை நோக்கி, மிகவும் கஷ்டப்பட்டு நடக்க ஆரம்பித்தேன். அது நண்பகல் வேளை வேறு. அதிக வெப்பமாகவும் இருந்தது. அதனால் களரிக்குப் பின்னால் இருந்த நிழலில் நின்று, சிறிது ஓய்வெடுத்தபின், சிறிது சக்தியைப் பெற முயன்றேன். நான் கஷ்டப்படுவதைக் கண்ட அம்மா, விவரம் அறிவதற்காக என் அருகில் வந்தார். சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை நான் அம்மாவிடம் விவரித்தேன். கெய்லின் இந்தப் புதிய மோசமான நடவடிக்கையால் மனம் வருந்திய அம்மா, கெய்லை அறிவில்லாத குழந்தையாகக் காணுமாறும், அவர் தரும் தொல்லைகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாதென்றும் என்னிடம் கூறினார். நான் எதிர்த்தால், நானும் அவரைப்போல் அறிவற்றவனாக ஆவேன் என்றார். இது முற்றிலும் அறிவுக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியதால், அன்றுமுதல் பொறுமையையும், சுய கட்டுப்பாட்டையும் பின்பற்ற நான் தீர்மானித்தேன். கெய்ல் அருகில் இருந்த காரணத்தால், இந்த உயரிய கோட்பாடுகளைப் பயில எனக்கு மிக அதிகமான வாய்ப்புகள் இருந்தன என்பதைச் சொல்லவும் வேண்டுமா!
திருவண்ணாமலையில் இருந்த காலத்தில், அங்கிருந்த என் முதல் குருவுக்கு சேவை செய்தபோது கிடைத்த அனுபவத்தை வைத்து எனக்கு ஒரு விஷயம் நன்கு புரிந்தது; ஒரு மகானுக்கு சேவை செய்வது என்பது, கடின சாதனைகளைப் பின்பற்றுவது போன்றதொரு தவமாகும். அதனால் எனக்கு கெய்லோடு இரக்கமே தோன்றுவதுண்டு. மகான்களுடன் மிக நெருக்கமாகப் பழகும்போது, பக்தனின் மனதின் உள் அறைகளில் உள்ள கோபம், வெறுப்பு போன்ற தீய குணங்கள் வெளியில் வந்து, அளவற்ற மனப்போராட்டத்தை ஏற்படுத்தும். இது ஒரு மனிதனின் புறச்செயல்களிலும் வெளிப்படக்கூடும். ஆனால், நாளடைவில், உண்மையில் நிகழ்வது என்ன என்பதை அறியும் பக்தன், அந்தத் தீய வாசனைகளைத் துறக்கவும், தன்னைக் கட்டுப்படுத்தவும் கற்கிறான். இக்குணங்கள், முன்னரே குடித்த விஷத்திற்கு நிகராகும். இவற்றைத் துறக்கவில்லை என்றால், ஆரோக்கியம் உண்டாகாது. மற்றொரு விதத்தில் கூறினால், இறந்த காலத்தில் அறியாமையால் சம்பாதித்து வைத்துள்ள தீய வாசனைகளை அடியோடு அழித்தால்தான் மனத்தூய்மை ஏற்படும். அம்மாவுக்கு இவ்விஷயம் நன்றாகத் தெரியும். அதனால் எங்களுடைய தீய குணங்களைக் குறித்தும், மனப்போராட்டங்களைக் குறித்தும் விழிப்புணர்வு பெறுமாறு அம்மா எங்களுக்குக் கற்பித்து வந்தார். வெகுநாட்களுக்கு முன்பே அம்மா என்னோடும், கெய்லோடும் உபதேசித்த விஷயம்: “குரு முதலில் தனது தெய்விகத்தன்மையை சீடனுக்கு வெளிப்படுத்துவார்; பின்னர் சீடனைத் தூய்மைப்படுத்த, அவனுடைய வாசனைகளை வெளியில் கொண்டுவருவதற்கு உதவும் வகையில் செயல்படுவார். இவ்வாறு செயல்படுவது, ஒரு மனிதனை ஆன்மிக முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தவே ஆகும்.” இவை நாம் படிக்கவேண்டிய பாடங்களாகும். முன்பே கூறியது போல் நான் கெய்ல் மீது இரக்கம் காட்டினேன். ஆனால், அவருடைய கோபமும், அகந்தையும், முட்டாள்தனமும் மாறவில்லை என்பது மட்டுமல்ல; மாறாக, நாளாக ஆக அதிகரித்தும் வந்தது. அவருடைய பிடிவாதத்தைக் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து நான் அவரிடமிருந்து போதுமான அளவு விலகி இருக்கத் தீர்மானித்தேன். அவர் ஆசிரமத்தில் வசித்த இறுதிக் காலக்கட்டங்களில் இயன்ற அளவு மிகக்குறைவாகவே அவருடன் பேசினேன். இப்போது அவர் தனது நூலின் மூலம் அம்மாவுக்கும், அம்மாவின் சீடர்களுக்கும் எதிராக உயர்த்தும் குற்றங்களை – என்னைத் துன்புறுத்தினார் என்ற குற்றங்களை – அவருடைய 20 வருட ஆன்மிக வாழ்வு காலத்தில் நான் கேட்டதில்லை. இந்தக் குற்றங்களைப் படிக்கும்போது, அவர் தவறான சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருப்பதாகவும், மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நான் கருதுகிறேன். தனது புத்தகத்தில் அவர், “என் நம்பிக்கைகளை நிரூபணம் செய்யவும், உண்மையையும், சங்கல்பத்தையும் வேறுபடுத்தி அறியும்போது நான் மிகவும் வருந்துகிறேன்” என்று எழுதி இருப்பது, கெய்லின் தவறான எண்ணங்களை மிகவும் நன்றாக எடுத்துக் காட்டுகிறது.
மன அழுத்தநோயின் ( டிப்ரஸன்) அறிகுறிகளில் இது போன்ற ஒரு நிலை உண்டு. இது பிற நோய்களுக்கும் மேலாக, மாற்ற இயலாத தவறான (பொருந்தாத) செயல்களும், வருத்தமும், கோபமும் உள்ள ஒரு மனநிலையும் உருவாகலாம். மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமுள்ளவர்களைக் கூட சந்தேக நோயின் கண்களின் மூலம் மிகத் தவறான கண்ணோட்டத்துடன் காணக்கூடும். இல்லாத காரியங்களை அவர்கள் மீது சுமத்தலாம். பல்வேறு காரணங்களால் மனநிலை தடுமாறும்போது, இதுதான் நிகழும். இவ்விஷயத்தில் மருந்துகள் மிகவும் உதவி செய்யும். ஆனால், தனக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்று சம்மதிப்பது மிகவும் கஷ்டமாகவும், நாணமாகவும் தோன்றக்கூடும். ஆசிரமத்திலிருந்து வெளியேறியபோது கெய்லின் மனநிலை மிகவும் மோசமாக இருந்தபோதிலும், அவர் இதுபோன்ற ஒரு புத்தகம் எழுதுவார் என்றோ, அதை வெளியிடுவார் என்றோ எனக்குத் தோன்றவில்லை. அவரிடம் அளவற்ற கோபமும், வெறுப்பும் வெளிப்பட்டிருந்த போதிலும், இதுபோல் ஒரு நூல் எழுதுவார் என்று நான் சிந்தித்தது கூட இல்லை. ஆத்ம நாசத்திற்குக் காரணமாகும் ஒரு நூலை, ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்காதவர்களும், ஆன்மிகப் பாதையின் தொடக்கத்தில் உள்ளவர்களின் ஆன்மிக நம்பிக்கையையும் குலைக்கும் இதுபோன்ற ஒரு நூலை எழுதுவார் என நினைக்கவில்லை. அம்மாவின் மகிமையைக் குறித்து ஏதாவது ஒரு கருத்து அவருக்கு நிச்சயமாக உண்டு. அவர் போனபோது அவர்மீது அதிக அளவில் இரக்கத்தை வெளிப்படுத்தியவர்கள், அவரிடம் புத்தகம் எழுதுமாறும், அதை வெளியிடுமாறும் தூண்டியிருக்கக்கூடும். அதைச் செய்யவேண்டும் என்று கூறியிருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களில் சிலர், குருவைப்பற்றிய விஷயங்களில் எதிரான கருத்துக்களை வெளியிட்டவர்கள் ஆவர். எளிதில் வளைந்து கொடுக்கும் நிலையில் கெய்ல் இருப்பதைக் கண்ட அவர்கள், ஒருவேளை வாய்ப்பைப் பயன்படுத்த முன்வந்திருக்க வேண்டும்; புத்தகத்தை வெளியிட்டிருக்கவேண்டும். இதுபோன்ற சில கருத்துக்களை புத்தகத்தின் இறுதியில் கெய்ல் குறிப்பிடுகிறார். ஒரு திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற நோக்கம் இதன் பின்னால் இருப்பது நன்கு தெளிவாகிறது.
– ஸ்வாமி பரமாத்மானந்த புரி ( நீல்ரோஸ்னர், அமெரிக்கா)