என் பெயர் லக்ஷ்மி. நான் ஹாலந்தில் பிறந்தவளாக இருந்த போதும் கடந்த 29 வருடங்களாக அம்மாவின் அமிர்தபுரி ஆசிரமத்தில் வசித்து வருகிறேன். அது மட்டுமல்ல. கடந்த 19 வருடங்களாக அம்மாவின் அறையில் 24 மணிநேரம் வசிப்பதுடன், அம்மாவுக்கும் சேவையும் செய்து வருகிறேன். அம்மாவுக்கு சேவை செய்தல் என்ற இந்த வரமானது மரணம் வரை எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது மனப்பூர்வமான பிரார்த்தனையாகும். இதை நான் எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நானும் ஸ்வாமினி. ஆத்மப்ராணாவும் ( டாக்டர் லீலா) அம்மாவை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாக ஒரு வதந்தி இணையதளத்தில் வந்திருப்பதாக என்னிடம் சிலர் கூறினர். பரிபூரணமான மனநிறைவுடன் நாங்கள் அம்மாவுக்குச் சேவை செய்தபடி இருப்பதை இதன்மூலம் தெரியப்படுத்துகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் கெய்லைப் ( காயத்ரி) பற்றியும் அவரிடமிருந்து ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதை எனது தர்மமாகக் கருதுகிறேன்.
முதல் அனுபவம்: கெய்ல் 20 வருடங்களாக தான் அம்மாவின் அறையில் வசித்ததாகவும், அம்மாவுக்கு சேவை செய்து கொண்டிருந்ததாகவும் என்று சொல்வதில் சிறிதளவும் உண்மை இல்லை. 1999-ஆம் வருடம் அம்மாவிடமிருந்து விலகிச் செல்வதற்கு முன்பு உள்ள சுமார் ஐந்தாறு வருடங்கள் கெய்ல் அம்மாவின் அறையில் அவர் வசிக்க வில்லை. ஆசிரமக் கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் உள்ள அறையில் அவர் தனியாக வசித்தார். அதன் பிறகு, எனக்கு உதவி செய்வதற்காக அம்மாவின் அறைக்குக் கீழே இறங்கி வருவது வழக்கம். நான் அம்மாவுடன் வசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பும், அம்மாவுடனும் கெய்லுடனும் வேறு சில பெண்கள் வசித்தனர். அவர் விலகிச் சென்றவுடன் ஸ்வாமினி கிருஷ்ணாமிர்த ப்ராணாவும் ( சௌம்யா, ஆஸ்திரேலியா ) அம்மாவின் கட்டிடத்தில் வசிக்க ஆரம்பித்தார்.
1981- ஆம் வருடம் கெய்ல் முதன்முதலாக அம்மாவைக் காண வந்த போது, அவரிடம் உடுப்பதற்கு மாற்று உடை கூட இருக்கவில்லை. அன்று ஆசிரமம் என ஒன்று துவங்கப் படவில்லை. அம்மாவின் வீடு மட்டுமே இருந்தது. கெய்லின் ஊரோ, பெயரோ, அவர் வளர்ந்த சூழ்நிலை குறித்தோ எதுவும் கேட்காமல் அம்மா கெய்லை முழுமையாக ஏற்றுக் கொண்டார். எல்லாப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அன்று முதல், ஆசிரமத்திலிருந்து வெளியேறும் வரை ஒரு அரசியைப் போலவே அவர் வாழ்ந்தார் எனலாம். அவர் அம்மாவின் பெற்றோர்கள் மீதும் சகோதர சகோதரிகள் மீதும் ஆசிரமவாசிகள் மற்றும் பக்தர்கள் மீதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தினார். அவ்வளவு ஏன்: அம்மாவின் சீடர்களிடம் கூட தனது ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தினார் எனலாம். கெய்ல் எப்போதும் ஒரு சர்வாதிகாரியினைப் போல தான் கூறுவதை அப்படியே கேட்கும் ஒரு கூட்டத்தை தன்னைச் சுற்றிலும் வைத்திருந்தார். தான் கூறுவதைக் கேட்காதவர்களை எல்லாம் அவர்களது மன உணர்ச்சிகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்காமல் மிகவும் துன்புறுத்தினார்.
கெய்லே! உன் கட்டுப்பாடில்லாத கோபத்தையும் உடலளவில் உனது துன்புறுத்தல்களை எத்தனை முறை நான் சகிக்க நேர்ந்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அடி, உதை, கிள்ளுதல், முகத்தில் துப்புதல், முடியைப் பிடித்து இழுத்தல், பயமுறுத்தல் என எத்தனையோ வகையில் நீ என்னைத் துன்புறுத்தினாய்! இவை எல்லாம் உனது தினசரி நடவடிக்கைகளாக இருந்தன. ஒருமுறை சூடான இஸ்திரிப் பெட்டியை நீ என்மீது எறிந்தது நினைவிற்கு வருகிறது. ஆசிரமவாசிகள் மட்டுமல்ல; ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பக்தர்களுக்கு இந்நிகழ்ச்சியைப் பற்றி நன்கு அறிவர்.
ஆசிரமத்தில் யாரும் உன்மீது அன்பு செலுத்தவில்லை: துணையாக இருக்கவில்லை என்றெல்லாம் நீ சொல்வது அபாண்டமான பொய் அல்லவா? உண்மையில் , பாரத மக்களும், வெளிநாட்டவருமான ஆசிரமவாசிகளும் பக்தர்களும் அம்மாவின் சீடர்களும் உன்னிடம் அன்போடுதான் நடந்து கொண்டனர். பக்தர்கள் உன்னைப் பரம்பரை வழக்கப்படி பாதபூஜை செய்தல்லவா வரவேற்றனர் ! பாரதத்தைச் சேர்ந்த பக்தர்கள் உனக்கு தங்கள் நாட்டு உணவுவகைகளைக் கொண்டு வந்து கொடுக்கவில்லையா? உனது உடைகளைத் துவைத்துத் தருவதற்கும் ஆசிரமத்தில் ஆட்கள் இருக்கவில்லையா? உனது கைகால்களைப் பிடித்துவிடுவதற்கும் ஆட்கள் இருந்தார்களே! இவையெல்லாம் உண்மையல்ல என்று உனது மனசாட்சியைத் தொட்டு உன்னால் சொல்லமுடியுமா?
கெய்லே! நீ உண்மையில் எதனால் ஆசிரம வாழ்வையும், சந்யாஸ வாழ்வையும் துறந்து சென்றாய் என்பது உனக்கும் நன்றாகத் தெரியும்; எனக்கும் நன்றாகத் தெரியும். அம்மாவின் ஒரு அமெரிக்க பக்தரை நீ மிகவும் விரும்பினாய். நீ ஆசிரமத்திலிருந்து வெளியேறிய பிறகு அந்த பக்தர் அம்மாவிடம் அந்த உண்மையை நேரில் சொன்னார். பயந்து போன அவர், நீ அனுப்பிய இ-மெயில்களை காண்பிக்கவும் செய்தார். பிரம்மசாரி சுபாமிர்தாவும் மற்றொரு ஆசிரமவாசியும் இ-மெயில்களை அம்மாவுக்கு மலையாளத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கும்போது நானும் கூட இருந்தேன். அந்தக் களங்கமற்ற மனிதனை அம்மாவிடமிருந்து அகற்றி உனதாக்கிக் கொள்ள முயன்றாய். ஆனால், உன் விருப்பங்கள் ஒருநாளும் நிறைவேறவில்லை. கெய்லே! நிறைவேறாத எதிர்பார்ப்புகளாலும் பலனளிக்காத ஆசைகளாலும் உன் மனதில் பொறாமையும் பகைமையும் நிறைந்தது. களங்கமற்ற இதயங்களில் உன் பொய், வஞ்சனை ஆகியவற்றை ஏற்றலாம் என்ற எண்ணத்தில் நீ விஷம் கக்கும் பாம்பாக மாறினாய்.
நீ தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிகள் நடத்தி உலகம் முழுவதும் சுற்றி வர விரும்பினாய். என்னிடமும் வேறு பலரிடமும் நீ இந்த விருப்பத்தைப் பலமுறை வெளியிட்டாய். இதுபோன்ற ஆசைகளுடன் தான் நீ ஆசிரமத்திலிருந்து வெளியேறினாய். ஆனால் உனது சுயநல விருப்பங்களும் கனவுகளும் நிறைவேறவே இல்லை. நமது விருப்பங்களோ ஆசைகளோ நிறைவேறவில்லையெனில் அவை கோபமாகவோ பழிவாங்கும் மனோபாவமாகவோ வெளிப்படும் என மகான்கள் கூறியுள்ளனர். கடைசியில் அழிந்து போவது நாம் தான். இதுதான் இப்போது உனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அம்மா தமது அளவற்ற கருணையால், நாளடைவில் உன்னிடம் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்துடன் பலவாய்ப்புகளை அளித்து உனக்கு அருள் புரிந்தார். கடைசியாக சந்யாஸம் என்ற அருளையும் வழங்கினார். இந்த வாழ்க்கை விரதத்தின் தூய்மையை நீ சிறிதளவாவது அறிவாயா? மகான்கள் முக்காலத்தையும் அறிபவர்கள் ஆவர். இருப்பினும் அவர்கள் நாம் வளர்வதற்கும் உயர்வதற்கும் உரிய வாய்ப்புகளை அனைவருக்கும் அளிப்பர். அவர்கள் பூமிதேவியைப் போல் பொறுமையுடன் காத்திருப்பார்கள். ஆனால் உனது விருப்பு, வெறுப்புகளுக்கு மட்டுமே மதிப்பளித்த நீ அந்த விலைமதிப்பற்ற வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டுவிட்டாய். கீழான மனநிலையில் மூழ்கியிருந்த உனக்கு அம்மாவின் அன்பையோ, கருணையையோ வழிகாட்டுதலையோ ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உனது குற்றம் குறைகளையும் பலவீனங்களையும் அம்மாவின் மீது சுமத்தினாய். உன் மனம் அம்மாவின் மீதுள்ள பகையால் நிறைந்துள்ளது.
பெரும்பாலும் உனது அருகாமையும் நீ நடந்து கொள்ளும் முறையும் எங்களுக்கு பயத்தை அளிப்பதுண்டு. ஸ்வீடன் நாட்டில் ஒருமுறை நீ உன் பிடிவாதத்தால் அம்மாவை ஒரு படகில் ஏற்றி ஆழமுள்ள இடத்தை நோக்கி நீ செலுத்தியதையும் அங்கே அம்மாவை நீரில் கவிழ்த்து விட்டதையும் கண்ட பலரின் நினைவுகளிலும் அது பசுமையாக நிலைத்திருக்கிறது. அவ்வளவு ஆழமுள்ள இடத்திற்கு படகைச் செலுத்தாதே என்று அம்மா உன்னிடம் கேட்டுக்கொண்டதை நான் உள்பட அந்தப் பயணத்தில் இடம்பெற்ற பலரும் கேட்டனர். படகை ஆட்டாதே என்றும் கவனமாகச் செலுத்துமாறும் அம்மா உரத்த குரலில் சொல்வதையும் நாங்கள் கேட்டோம். சட்டென படகு கவிழ்வதையும், உடல் மரத்துப் போகும் அளவுக்கு பனிக்கட்டி போலிருந்த நீரில் அம்மா விழுவதையும் கண்டு நாங்கள் வாய்விட்டு அலறி அழுதோம். அது ஒரு பயங்கரமான காட்சியாக இருந்தது.
பிரம்மசாரிணி பவித்ராமிர்தா (லீலாவதி), விநீதாமிர்தா (ஸ்ரீ லதா) ஆகியோரின் வேண்டுதலைப் புறக்கணித்து விட்டு, விஷத்தன்மையுள்ள நாய்க்குடைக் காளானைச் சமைத்து அம்மாவுக்கு நீ கொடுத்த மற்றொரு சம்பவமும் எங்கள் நினைவை விட்டு அகலவில்லை. அதைச் சாப்பிட்ட பிறகு இரண்டு தினங்கள் அம்மா வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ரத்தப் பரிசோதனை செய்த போது மரணம் விளைவிக்கக் கூடிய பயங்கரமான விஷத்தன்மையுள்ள பொருள் அம்மாவின் ரத்தத்தில் கலந்திருப்பதாகத் தெரிய வந்தது. மற்றொரு முறை, குறித்த அளவை விட மிக அதிகமான மருந்தை நீ அம்மாவுக்குக் கொடுத்தாய். அம்மா வயிற்று வலியால் துடித்து சோர்வடைந்தபோது அந்தப் பழியை என்மீது சுமத்தினாய். இதை நீ மறந்திருக்க வழியில்லை.
உன்னைப் போலவே, ஸ்வாமினி கிருஷ்ணாமிர்த ப்ராணாவுக்கும் ஸ்வாமினி ஆத்ம ப்ராணாவுக்கும் சந்யாஸம் கிடைத்தது. அவர்கள் இருவரும் உனது கீழ்த்தரமான இயல்பைக் கண்டு நடுங்கிப் போயிருக்கிறார்கள். இவ்வளவு வெறுப்பும் துரோக சிந்தனையும் பகையும் கொள்ளும் நிலையில் இருக்கும்போது உன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று எங்களுக்குப் புரிந்துவிட்டது. முன்பு நடந்தது எதுவும் எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சிகள் அல்ல என்பது எனக்கு உறுதியாகிறது. ஆனால், அம்மா இந்த சம்பவங்களில் எதையும் யாரிடமும் சொல்லவில்லை. அம்மா அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, உன்னை மன்னித்து தொடர்ந்து உன்மீது அன்பும் கருணையும் காட்டினார்.
நீ இவ்வளவு செய்த பிறகும் உனக்காகப் பிரார்த்திக்கும்படி மட்டுமே அம்மா எங்களிடம் சொன்னார். அது மட்டுமல்ல; இப்போதுகூட என்னை அழைக்க முயலும் வேளையில், காயத்ரீ எனப் பலமுறை அழைப்பதுண்டு. உனது விஷ வார்த்தைகளை உண்மையெனத் தவறாக எண்ணும் களங்கமற்ற மனிதர்களைக் குருடர்களாக்க நீ முயலும்போதும் உன்மீது அன்பு மட்டுமே இருப்பதாக அம்மா கூறுகிறார். இதைக் கேட்கும்போது அம்மாவின் எல்லையற்ற கருணை மற்றும் தாய்மை அன்பின் முன்னால் தலைவணங்கவே என்னால் முடிகிறது.
ஒரு கலங்கிய, செல்லரித்துப் போன மனம் கூறும் குறைகளின் அடிப்படையில் அம்மாவுக்காக எதிர்ப்புத் தெரிவிக்கவோ அம்மாவைப் பற்றி விவரிக்கவோ வேண்டிய அவசியம் சிறிதும் இல்லை. ஆனால், தர்மத்திற்காக இவற்றை வெளிப்படுத்த நேருகிறது.
கெய்லே ! உன்னைக் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். உனது அறியாமை என்ற இந்த இருளிலிருந்து நீ வெளியில் வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.
பிரம்மசாரிணி. லக்ஷ்மி (மௌரின் வில்டேன் பெர்க் )
source: Remembering Gail Tredwell