என் பெயர் ருக்மிணி . நான் ரீயூனியன் நாட்டைச் சேர்ந்தவள். நான் ஸ்வாமி ப்ரேமானந்த புரியின் (மதுசூதனன்) சகோதரி. கெய்ல் திருவண்ணாமலைக்கு வந்தபோது அவருக்கு ஆன்மீகம் என்றால் என்னவென்பது தெரியாது. அவருடைய கையில் சல்லிக்காசு கூட இருக்கவில்லை, அப்போது அவர் திக்குத் திசை தெரியாத காட்டில் வழி அறியாமல் நிற்பவரைப் போல் இருந்தார். தான் வாழ்வதற்கு, தனது பாதுகாப்பிற்கு ஒரு வழி தேடி நடப்பவராக அவர் இருந்தார். மது அவருக்கு ஆன்மீகத்தைக் குறித்து சில கருத்துக்களை எடுத்து கூறினார். மதுவின் உதவியுடன் கெய்ல் அம்மாவைத் தரிசித்தார் . அன்று கெய்லுக்கு மது மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். கெய்ல் ஆசிரமத்திற்கு வந்த சிறிது காலத்திலேயே, 1980-ஆம் வருடம் நானும் அம்மாவை தரிசித்தேன் . அன்று எனக்கு 17 வயது . கெய்லை நான் எனது மூத்த சகோதரியாகவே நினைத்தேன் . அன்று ஆசிரமம் இன்று போல் இல்லை அம்மாவுக்கு 26 வயதுதான் .அம்மா ஒரு மகானாக உலகத்தால் அறியப்படவில்லை. ஆனால், அன்றும் களரியில் ஏராளமான பக்தர்களுக்கு அம்மா தரிசனம் அளித்துக்கொண்டிருந்தார்.
உண்மையில் அம்மாவின் குடும்ப வீடும் அம்மா தரிசனம் அளித்திருந்த களரியும் நாங்கள் வசித்த சிறிய குடிசையும் மட்டுமே அன்று இருந்தன. அம்மாவுடன் பரமாத்மானந்த ஸ்வாமியும் (நீலு) கெய்லும் வசித்த அதே சிறிய குடிலில்தான் நானும் வசித்தேன் . அம்மாவின் வடிவில் இறைவனே வசிக்கும் இந்த இடம் எனக்கு சொர்க்கமாக இருந்தது. கெய்ல் அக்காலத்தில் பேசிய பேச்சிலிருந்து எனக்கு இருந்த அதே கருத்து அவருக்கு இல்லை என்பது புரிந்தது. காலப்போக்கில், அவர் எனது சொர்க்கத்தை நரகமாக ஆக்க ஆரம்பித்தார்.
நான் வயதில் சிறியவளாக இருந்த காரணத்தாலும் கெய்ல் செய்திருந்த வேலை (இது கெய்லின் கூற்று) மீதிருந்த மரியாதையாலும் அவருடன் சேர்ந்து நானும் சேவையில் ஈடுபட விரும்பினேன். உண்மையில் அவ்விதம் செய்யுமாறு அம்மாதான் என்னிடம் கூறினார். அப்போதுதான் கெய்ல் தனது இயல்பின் மறுபக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அவர் தனது பிறப்புரிமையாகக் கருதியிருந்த வேலையில் நானும் இடம் பிடிப்பதை அவர் சிறிதும் விரும்பவில்லை. அதனால் அவர் எப்போதும் என்னிடம் “இது என் வேலை” என்று கூறுவார் . அம்மாவுக்குத் தேவையானதைச் செய்ய தனக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் அம்மா தனக்கு மட்டுமே உரியவர் என்றும் அவர் கருதியிருந்தார் . அவரைத் தவிர வேறு யாரும் அம்மாவை நெருங்கக் கூடாது. இந்நிலையில்தான் அவர் எனக்கு முற்றிலும் துரோகம் செய்ய ஆரம்பித்தார் . நான் அம்மாவுக்கு சேவை செய்யத் தகுதியற்றவள் என்று எனக்கு தோன்றவேண்டும் என்ற நோக்கத்துடனும் அம்முயற்சியை நான் விட்டுவிட வேண்டுமென்ற எண்ணத்துடனும் அவர் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்தார் . என்னை ஆசிரமத்திலிருந்து விரட்டிவிட அவர் முழுமூச்சாகப் பாடுபட்டார் . எனக்கு என் வீட்டில் சுகமாக வாழலாம் என்றும் நான் ஆசிரமத்தை விட்டு போய்விடுவதுதான் எனக்கு நல்லது என்றும் அவர் பலமுறை என்னிடம் கூறினார்.
ஒரு நாள் நாங்கள் இருவரும் அம்மாவின் அருகில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது அம்மா “என் இரு மகள்களில் ஒருத்தி கருப்பு, மற்றொருத்தி வெளுப்பு-பரஸ்பரம் கைகோர்த்து நிற்பதைக் காணும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா! இவ்வுலகையும் இவ்விதம் காண நான் விரும்புகிறேன். நிறத்தாலோ மதத்தாலோ வேறுபடுத்தப்படாமல் கைகோர்த்து நிற்கின்ற ஒரு உலகைக் காண அம்மா விரும்புகிறேன்” என்றார் . அப்போது அம்மாவுக்கு கேட்காது என்ற நினைவுடன் கெய்ல் என்னிடம்” அம்மா கூறுவதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. ஏனெனில், எனக்கு உன்னைச் சிறிதும் பிடிக்கவில்லை. ஒருநாளும் உன்மீது எனக்கு அன்பு தோன்றாது ” என்றார். நான் மிகவும் மனம் சோர்ந்துவிட்டேன். என் மனதில் இந்த ஒற்றுமை அனுபவப்பட்டிருந்த போதும். (கெய்லும் நானும் சேர்ந்துதான் அம்மாவுக்கு சேவை செய்து வந்ததால்) கெய்லுடன் இங்கு எப்படி தொடர்ந்து வசிப்பது என்ற பயமும் சந்தேகமும் தோன்றியதே இதன் காரணங்களாகும். எனது வருத்தமான முகபாவத்தைக் காணும்போது அம்மா என்மீது இரு மடங்காக அன்பைப் பொழிவார். இது கெய்லுக்கு கோபம் வரக் காரணமாகும். அப்போது அம்மாவின் அன்பை அனுபவித்ததற்கான விலையை நான் அளிக்க நேரிடும். என்மீது கொண்ட பொறாமையால் நாங்கள் இருவரும் தனியாக இருக்கும் வேளையில் கெய்ல் என்னிடம் கொடூரமாக நடந்துகொள்வதின் மூலம் விலையை வசூல் செய்வார் . அவ்வேளையில் நான் ஒன்றும் பேசாமல் எதிர்ச்செயல் புரியாமல் அனைத்தையும் சகித்துக்கொள்ள முயற்சி செய்வேன். உண்மையில் நான் அவரை ஒரு ராக்ஷஸியாகவே கண்டிருந்தேன். ஏனெனில், அவர் என்னைப் பயமுறுத்தி ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவ்விதமாக. இந்தக் கொடுமையை என்னால் சகிக்க முடியாத நிலை வந்தது. அம்மாவின் மீதுள்ள அன்பில் சிறிதளவும் குறைவில்லை என்றபோதும் நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு சில அற்பமான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்தேன். அம்மாவை விட்டுப் பிரிந்து சென்ற வேதனை இப்போதும் என்னை வாட்டுகிறது. ஆனால் அம்மாவின் நினைவுடன் என் பாதையில் நான் பயணம் செய்யும் வேளையில் அம்மா இறை அவதாரம் என்ற நம்பிக்கை என் மனதில் மேலும் உறுதியாகிறது. அம்மா இவ்வுலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கே சென்று அம்மாவுடன் வசிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் நான் இழப்பதில்லை. ஏனெனில் அது எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆசிரமத்திலிருந்து வெளியேறி 14 வருடங்களுக்குப் பிறகு கெய்லுக்கு அம்மாவைப் பற்றியும் அம்மாவின் சேவைகளைப் பற்றியும் இதுபோன்ற அவதூறுகள் கூற எப்படி மனம் வந்தது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எனக்கு வியப்பாக இருக்கிறது. அம்மாவின் ஆசிரமத்தில் நடந்ததாக கெய்ல் கூறுகின்ற விஷயங்களை வாசிக்கும்போது நான் திடுக்கிடுகிறேன். அம்மாவைப் பற்றிக் கண்டும் அனுபவித்தும் நான் அறிந்தவரையில் இந்த அவதூறுகள் நெறிகெட்டவை. சிறிதும் பொருந்தாதவை. வெறும் கட்டுக்கதைகள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. கெய்ல் கூறுவது போன்ற நிகழ்ச்சிகளில் எதுவும் ஒரு நாளும் நடக்கவே இல்லை.
இந்நூலை எழுதிய கெய்லைப் பற்றி நான் அறிந்த உண்மைகளைக் கூற விரும்புகிறேன். முழுப் பைத்தியக்காரத்தனம். புனைந்து எழுதப்பட்ட கட்டுக்கதைகள். பொறாமை போன்றவையால் நிறைந்தது அவரது நூல். இந்நூல் உலகிற்கு முன்னால் திறந்து காட்டுவது என்பது இவரைப் போன்ற ஒருவரின் இதயத்தில் குடியிருக்கும் அருவருப்பான குணங்களையே ஆகும்.
ஆனால் எனக்கு இதுவும் தெரியும். அம்மா தனது அளவற்ற அன்பு மற்றும் கருணையால் கெய்லை மன்னித்திருக்கக் கூடும். நான் இன்று “அம்மாவின் அருளால் கெய்லுக்கு அறிவு தெளியட்டும்” என்று பிரார்த்தனை செய்கிறேன் .
-ருக்மிணி (Rukmini Gilbert Ramaswamy, Mauritious)
source: Rukmini’s Memories of Gayatri