என் பெயர் சுபாமிர்த சைதன்யா . நான் 1989-ஆம் வருடம் முதல் அம்மாவின் ஆசிரமத்தில் வசித்து வருகிறேன். அம்மாவைக் குறித்தும், அம்மாவின் நிறுவனத்தைக் குறித்தும் கெய்லும், அவருடைய கைக்கூலிகளும் உருவாக்கி உள்ள பொய்யாகப் புனைந்து எழுதப்பட்ட கட்டுக்கதைகளையும் கேட்கும்போது நான் அதை எதிர்த்து எழுதவேண்டிய நிலையில் இருக்கி்றேன்.
சந்நியாஸப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் மிகச் சிலரே. அனைவராலும் அப்பாதையில் உறுதியாக நிற்க முடியாது. இவ்விஷயம் மனதில் வரும்போது எனக்கு, சந்நியாஸப் பாதையிலிருந்து தான் விலகியதற்கான காரணம், தனது உலகியல் ஆசைகளே என்ற உண்மையை ஏற்க மறுத்து, அம்மாவும் அம்மாவின் ஆசிரமும் தான் பிரச்னைகளுக்கான காரணம் என்று கூறி, தன்னை நல்லவளாகக் காட்டிக்கொள்ள கெய்ல் முயல்வது எனக்கு நன்கு புரிகிறது.
அம்மாவுக்கான மொழிபெயர்ப்பு செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதை நான் மிகப்பெரிய பாக்கியமாக, அருளாகக் கருதுகிறேன். அம்மாவின் வாழ்க்கை முறையை அருகிலிருந்து காணும் வாய்ப்பு இதன்மூலம் எனக்குக் கிடைப்பதுண்டு. நான் கடந்த 24 வருடங்களாக ஆசிரமத்தில் வசித்து வருவதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், கெய்ல் தனது புத்தகத்தில் எழுதியுள்ள வகையில் எந்தவொரு அதர்மமான சம்பவமும் அம்மாவின் சந்நிதியில் ஒருமுறைகூட நடந்ததில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததை விளக்கும் சிறிய ஆதாரம் கூட எனக்குக் கிடைக்கவில்லை.
கெய்ல் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய உடன் நடந்த ஒரு விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு அமெரிக்க பக்தனும், நானும், மற்றொரு பிரம்மசாரியும் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில், அந்த அமெரிக்க பக்தர் அம்மாவிடம் ஒரு விஷயத்தைக் கூறினார். அவர் கூறியதை நான்தான் அம்மாவுக்கு மொழிபெயர்த்துக் கூறினேன். அதைக் கூறுவதற்கு முன்னால் உங்களிடம் ஒரு உண்மையைக் கூறுகிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பொறுத்தவரை ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான கடமையாகும். இன்றுவரை அதை நான் பின்பற்றியும் வருகிறேன். வருங்காலத்திலும் அவ்வாறே நடந்துகொள்வேன். ஆனால், கெய்ல் அம்மாவுக்கும், அம்மாவின் நிறுவனத்திற்கும் எதிராகச் செய்துவரும் பொய் பிரசாரத்தைக் காணும்போது நான் இந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறேன். அதேசமயம், அந்த பக்தரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.
அமெரிக்க பக்தர் அம்மாவிடம், கெய்லுக்கு 1994-ஆம் வருடம் முதல் தன்மீது விருப்பம் தோன்றியது என்று கூறினார். அந்த பக்தரின் அருகாமையைத் தான் விரும்புவதை கெய்ல் நன்கு வெளிப்படுத்தி வந்தார். பயண வேளைகளில் அந்த பக்தருடன் பேசுவதற்காகச் செல்வார். இல்லாவிடில், அமிர்தபுரியிலிருந்து அவருக்குப் போன் செய்வார். ஆரம்பகாலத்தில், கெய்லின் பேச்சில் பொருத்தமற்றதாக எதுவும் இருப்பதாக பக்தருக்குத் தோன்றவில்லை. ஆனால், நாளடைவில் கெய்லின் செயல்களில் ஒரு மாற்றம் இருப்பதை அவர் உணர ஆரம்பித்தார். அவர் தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்குவதைப் புரிந்துகொண்ட பக்தர் குழப்பத்தில் ஆழ்ந்தார். தாமதமின்றி கெய்ல் அவரிடம், தான் அவரை மிகவும் நேசிப்பதாகவும், அவருடன் உறவுகொள்ள விரும்புவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், குடும்ப வாழ்வை ஆரம்பிக்கலாம் என்றும் கூட அவர் கூறினார். கெய்ல் கூறியதைக் கேட்ட பக்தர் திடுக்கிட்டார்; மன அமைதியை இழந்தார். நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வது என்பது நடக்க இயலாத காரியம் என அவர் எடுத்துரைத்தார். அவரால் அம்மாவுக்கு இவ்விதம் துரோகம் செய்வதை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
கெய்ல் பின்பற்றிவரும் சந்நியாஸ தர்மத்தைப் பற்றி அவருக்கு எடுத்துரைக்க அந்த பக்தர் எவ்வளவோ முயற்சி செய்தார். இருப்பினும், அவரது வார்த்தைகளை கெய்ல் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. கெய்ல் தொடர்ந்து அந்த பக்தருக்கு போன் செய்வார். இ-மெயில் அனுப்புவார். இது விடாமல் தொடர்ந்து வந்தது. “ஆசிரமத்திலிருந்து நான் வெளியேறியபின், நாம் இருவரும் சேர்ந்து வசிப்பதற்கு நீ ஒரு அபார்ட்மென்ட் வாங்கவேண்டும்” என்று அவர் அந்த பக்தரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
ஆசிரமத்திலிருந்து வெளியேறிய பிறகு கெய்ல் அம்மாவையும், நிறுவனத்தையும் பற்றிப் பொய்க்கதைகளைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தபோதும், அவர் எக்காரணத்தால் ஆசிரமத்திலிருந்து வெளியேறினார் என்ற உண்மையை அம்மா உலகிற்கு எடுத்துரைக்கவில்லை. ஏனெனில், மக்களின் மனதில் கெய்ல், மோசமானவளாகப் பதிவதை அம்மா விரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அம்மாவின் இந்தக் கருணை நிறைந்த இதயத்தை கெய்ல் ஒருநாளும் காணவோ, புரிந்துகொள்ளவோ இல்லை.
தனது வாழ்வையும், அனுபவங்களையும் உள்ளதை உள்ளதுபோல் அப்படியே உலகின் முன்னால் காட்டுவதுதான் கெய்ல் எழுதிய நூலின் நோக்கமெனில், இந்த முக்கியமான நிகழ்ச்சியை மட்டும் அவர் ஏன் எழுதவில்லை? உண்மையை மறைத்து எழுதும் பொய்யான பிரசாரமே இந்நூல் என்பது இதன்மூலம் நன்கு விளங்குகிறது. இதுபோலவே, மற்றொரு விஷயத்தையும் எழுதாமல் மறைத்துவிட்டார்.
ஆசிரமத்திலிருந்து வெளியேறிய அவர், சில வருடங்களுக்குப் பிறகு ஒரு வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டதையும், தொடர்ந்து அவரை விவாகரத்து செய்ததையும் ஏன் எழுதவில்லை? இந்த விவரம் சமீபத்தில்தான் எனக்குத் தெரியவந்தது.
– சுபாமிர்தா
source: Gail Tredwell’s Lie of Omission